மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் திட்டம் தொடரும்! தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு

"2026-27 ஆம் கல்வியாண்டில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ்கள் (Free Bus Pass 2026) அந்தந்த கல்வி நிறுவனங்களிலேயே தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் வழங்கப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார்." 



 தமிழ்நாட்டில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான இலவச பேருந்து பயணச் சலுகை இந்த ஆண்டும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் ஜூன் 4ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்றும், அதனைத் தொடர்ந்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு பல் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் (ITI) ஆகியவை அடுத்தடுத்து திறக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் ஏ. விஜய் தமிழன் பார்த்திபன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

2026–27 ஆம் கல்வியாண்டில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ்கள் (Free Bus Pass), அந்தந்த கல்வி நிறுவனங்களிலேயே விநியோகம் செய்யப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் (TNSTC) மூலம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

புதிய இலவச பேருந்து பாஸ்கள் தயாரித்து வழங்குவதற்கு சில காலம் தேவைப்படும் என்பதால், அதுவரை பள்ளி மாணவர்கள் தங்களது சீருடையை (Uniform) அணிந்து கொண்டு, தங்கு தடையின்றி அரசு பேருந்துகளில் இலவசமாக பள்ளிக்குச் சென்று வர அனுமதிக்கப்படுகிறார்கள்.

அதேபோல், அரசு கல்லூரி மாணவர்கள் தங்களது கல்வி நிறுவனங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை (Identity Card) காண்பித்து அரசு பேருந்துகளில் கட்டணமின்றி இலவசமாகப் பயணிக்கலாம் என்றும் அமைச்சர் தனது அறிக்கையில் விரிவாக விளக்கியுள்ளார்.

மாணவர்களுக்காக அரசு பேருந்துகள் முறையாக இயக்கப்படுவதை தீவிரமாக கண்காணிக்கும் பொருட்டு, மூத்த அதிகாரிகள் அடங்கிய சிறப்புக் குழுக்கள் மாநிலம் முழுவதும் நியமிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், "தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் (TNSTC) அனைத்து ஓட்டுநர்கள் (Drivers) மற்றும் நடத்துநர்களுக்கு (Conductors) உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்கள் பாதுகாப்பாக பேருந்தில் ஏறுவதையும், இறங்குவதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும், மாணவர்களுக்கான பிரத்யேக பேருந்து நிறுத்தங்களில் (Bus Stops) பேருந்துகளை கட்டாயம் நிறுத்திச் செல்ல வேண்டும் என்றும் அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்று அமைச்சர் தனது அறிக்கையில் மேலும் சேர்த்துள்ளார்.

1 கருத்துகள்

புதியது பழையவை