கர்நாடக எச்.ஐ.வி சர்ச்சை: 7,000 பேருக்கு பாதிப்பு என்பது உண்மையா, வதந்தியா
இது குறித்து KSAPS திட்ட இயக்குநர் பத்மா பசவந்தப்பா (IAS) கூறுகையில், "எங்களது துறை மாணவர்கள், இல்லத்தரசிகள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் போன்ற தனித்தனி பிரிவுகளின் அடிப்படையில் எச்.ஐ.வி தரவுகளைப் பராமரிப்பதில்லை.
எனவே, எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்களைப் பற்றிய பிரத்யேக புள்ளிவிவரங்கள் எதுவும் அரசிடம் இல்லை" என்று தெரிவித்தார்.
7,000 என்ற பரவலாகப் பரப்பப்படும் எண்ணிக்கையை மறுத்த அவர், 2004-ஆம் ஆண்டு முதல் 18 முதல் 35 வயதுக்குட்பட்ட பிரிவில் மொத்தம் சுமார் 39,000 எச்.ஐ.வி தொற்றாளர்களை மட்டுமே KSAPS பதிவு செய்துள்ளதாகவும், எனவே வைரலாகும் தகவல்கள் முற்றிலும் தவறானவை என்றும் கூறினார்.
மேலும், எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் (தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 2017-ன் படி கட்டாய எச்.ஐ.வி பரிசோதனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது என்றும், ஒருவருக்கு எச்.ஐ.வி பரிசோதனை செய்யவோ அல்லது சிகிச்சை தொடங்கவோ அவர்களின் சம்மதம் கட்டாயம் தேவை என்றும் பத்மா பசவந்தப்பா தெளிவுபடுத்தினார்.
KSAPS கல்லூரிகள் மற்றும் இதர நிறுவனங்களில் தன்னார்வப் பரிசோதனையை ஊக்குவிப்பதற்காக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மட்டுமே நடத்தி வருகிறது என்றும் அவர் வலியுறுத்தினார்.
பாதுகாப்பான பழக்கவழக்கங்களை ஊக்குவிக்கவும், நோய்த்தொற்றை ஆரம்பத்திலேயே கண்டறியவும் கல்லூரிகள், தொழிற்சாலைகள், மென்பொருள் நிறுவனங்கள், காவல்துறை, போக்குவரத்து மற்றும் மருத்துவக் கல்வித் துறைகளில் தற்போது விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாகத் திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளார்.
சுமார் 56,000 பேருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது தெரியவில்லை
கர்நாடகாவில் சுமார் 56,000 பேருக்குத் தங்களுக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது குறித்து விழிப்புணர்வு இல்லை என்றும், எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் வெறும் 12 சதவீதத்தினர் மட்டுமே தாங்களாகவே முன்வந்து பரிசோதனை மையங்களுக்குச் சென்று பரிசோதித்துக் கொள்கிறார்கள் என்றும் அவர் கூறினார். அதிகளவில் விழிப்புணர்வு மற்றும் தன்னார்வப் பரிசோதனைகள் தேவ என்பதை இது உணர்த்துவதாக அவர் குறிப்பிட்டார்.
நோய்த்தொற்றை ஆரம்பத்திலேயே கண்டறிவதை மேம்படுத்துவதற்காக, 'பிரேக் ஃப்ரீ' (Break Free) என்ற கைபேசி செயலியைப் பயன்படுத்துமாறு KSAPS மக்களை ஊக்குவித்துள்ளது.
இந்தச் செயலி எந்தவொரு தனிப்பட்ட தகவலையும் சேகரிக்காமல், ஏழு கேள்விகள் மூலம் இரகசியமான சுய-ஆபத்து மதிப்பீட்டை (self-risk assessment) வழங்குகிறது.
இதில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கண்டறியப்படுபவர்கள், தங்களின் விருப்பத்தின் பேரில் அருகிலுள்ள ஒருங்கிணைந்த ஆலோசனை மற்றும் பரிசோதனை மையத்திற்கு (ICTC)ச் சென்று பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கர்நாடகாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 11,000 முதல் 12,000 வரையிலான புதிய எச்.ஐ.வி தொற்றாளர்கள் தொடர்ந்து கண்டறியப்பட்டு வருவதாகவும், எச்.ஐ.வி இன்னமும் ஒரு முக்கியமான பொது சுகாதார சவாலாகவே நீடிக்கிறது என்றும் பத்மா பசவந்தப்பா தெரிவித்தார்.
மேலும், டேட்டிங் செயலிகள் (dating applications) மூலமாக அடையாளம் தெரியாத நபர்களுடன் தொடர்புகொள்வது போன்ற சமூக நடத்தை மாற்றங்கள், பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிவதை (contact tracing) மிகவும் கடினமாக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பொதுமக்கள் பாதுகாப்பான உடலுறவைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், ஆணுறை பயன்படுத்த வேண்டும் என்றும், தேவைப்படும் போதெல்லாம் ஆலோசனை மற்றும் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
23,000 பேருக்கு இலவச சிகிச்சை
மாநிலத்தின் சிகிச்சைத் திட்டத்தைக் சுட்டிக்காட்டிய அவர், தற்போது KSAPS மூலம் சுமார் 23,000 பேர் இலவச சிகிச்சை பெற்று வருவதாகவும், இதில் சுமார் 96 சதவீதம் பேருக்கு வைரஸின் தாக்கம் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டு (viral suppression), மற்றவர்களுக்குத் தொற்று பரவும் அபாயம் கணிசமாகக் குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்தத் தவறானத் தகவல்கள் குறித்துக் கவலை தெரிவித்த பத்மா பசவந்தப்பா, பொய் செய்திகள் பெற்றோர் மற்றும் பொதுமக்களிடையே தேவையற்ற பீதியை உருவாக்கியுள்ளதாகக் கூறினார்.
தகவல்களைப் பகிரும் முன் KSAPS அல்லது தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பிடம் (NACO) உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு மக்களைக் கேட்டுக்கொண்ட அவர், சரிபார்க்கப்படாத தகவல்களைத் தொடர்ந்து பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் எச்சரித்தார்.
